வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் குழப்பம்; வேறு வார்டில் பெயர் சேர்க்கப்பட்டதால் மக்கள் தொடர் போராட்டம்...

First Published Jan 4, 2018, 8:00 AM IST
Highlights
People are continuously struggling for added their name in another ward ...


அரியலூர்

வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் பெயர்கள்  வெவ்வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரியலூரில் மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் இருந்தன. தற்போது மீண்டும் அதே 21 வார்டுகள் அமைக்கப்பட்டு 33,899 பேர் மறுவரையறை செய்து ஒரு வார்டுக்கு 1614 பேர் வீதம் இருப்பது போல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெயர் ஒரு வார்டில் இருந்து 2, 3-வது வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் 10-வது வார்டு மக்கள் தங்களை 8-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி செயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர்.

இந்த நிலையில் 14-வது வார்டு மக்கள் தங்கள் பெயரை 8, 10, 11, 19 ஆகிய 4 வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று செயங்கொண்டம் அண்ணாசிலை முன்பு திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள்,. "செயங்கொண்டம் நகராட்சி வார்டுகள் மறுவரையறை வரைவு குறித்து கருத்து தெரிவிக்க ஜனவரி 2-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினர்.

அப்போது மக்கள், "இதுகுறித்து எங்களுக்கு முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும். திடீரென அறிவிப்பு கொடுத்து விடுமுறை நாட்களில் தபால் மற்றும் மெயிலில் அனுப்ப சொன்னால் எப்படி அனுப்புவது?" என்று கேள்வி கேட்டனர்.

மேலும், "நேற்று முன்தினம் 10, 14-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் மனு கொடுக்க சென்ற போது 3 மணியோடு அலுவலக நேரம் முடிந்து விட்டது என கூறி மனுவை அலுவலர்கள் வாங்க மறுத்து விட்டனர். ஏற்கனவே குறிப்பிட்ட வார்டில் உள்ளவர்களை மீண்டும் அதே வார்டில் சேர்க்க வேண்டும்.

ரேஷன் பொருட்கள் வாங்கவும், ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளிலும் வார்டுகளை மாற்றவும் தங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே 1614 பேருக்கு மேல் இருப்பவர்களை வார்டில் இருந்து வெளியில் இருக்காமல் மறுவரையறை செய்ய வேண்டும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி கொடுங்கள் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர், மறியலை கைவிட்டு மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்த மறியலால் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

click me!