அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் ஆத்திரம்; 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம்...

First Published Feb 27, 2018, 10:02 AM IST
Highlights
People are angry because of government land occupation Over 300 people siege ...


திருவள்ளூர்

அக்கரம்பாக்கம் ஊராட்சியில் தவறான முறையில் பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரில் 300-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest Videos

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டையை அடுத்த அக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவர்களுக்கு அக்கரம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமைத் தாங்கி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், "நாங்கள் ஊத்துக்கோட்டையை அடுத்த அக்கரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 7.88 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.

அதனை எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் முறையற்ற வகையில் சிட்டா அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்து தவறான முறையில் பட்டா மாற்றம் செய்துள்ளனர்.

ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை இரண்டு நபர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தவறான முறையில் பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவும் செய்துள்ளனர்.

இதனை அறிந்த நாங்கள் தவறான முறையில் பட்டா மாற்றம் செய்து அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அக்கரம்பாக்கம் ஊராட்சியில் தவறான முறையில் பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறான முறையில் வழங்கப்பட்ட பட்டா மற்றும் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

300-க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய இந்தப் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

 

click me!