
கோவையில் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை அலுவலகம் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள், தங்கள் குடும்பத்துடன் கோரிக்கைகளை ஒப்பாரி பாடி போராட்டம் நடத்தினர்.
தமிழக போக்குவரத்துத் துறையில் வேலைசெய்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோவை – மேட்டுபாளையம் சாலையில் உள்ள கோவை அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை அலுவலகம் முன்பு போக்குவரத்து துறையை கண்டித்து, ஓய்வூதியர்கள் தங்கள் குடும்பத்துடன் கூடினர்.
பின்னர், அவர்கள், தங்கள் குடும்பத்துடன் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, ஓய்வூதியத்தை காலதாமதம் இன்றி உரிய தேதியில் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்.
கடந்த 2003–ஆம் ஆண்டு ஏப்ரல் 1–ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை தற்போது உள்ள ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்.
கடந்த 2010–ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒப்பந்த பலனை வழங்க வேண்டும்.
ஒப்பந்த ஓய்வூதிய உயர்வு 15 சதவீதமும் வழங்க வேண்டும்.
ஓய்வூதிய ஆணையை ஓய்வூதியம் பெறும் மாதத்திலேயே வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிகைகளை ஒப்பாரியாக வைத்தும், முழக்கங்களை எழுப்பியும் போராடினர்.
இப்போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், சேதுராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் கூறியது:
“கடந்த 16–ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் இதேபோன்று போக்குவரத்துறை ஓய்வூதியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர். எனவே, தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.