விதிமுறைகளை மீறினால் உடனடி அபராதம் – கூடுதல் டிஜிபி

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 10:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
விதிமுறைகளை மீறினால் உடனடி அபராதம் – கூடுதல் டிஜிபி

சுருக்கம்

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நடத்திய ஆலோசனையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக (நலத்துறை) மாகாளி உள்ளார். இவர் கோவை மேற்கு மண்டல போக்குவரத்து பொறுப்பு அதிகாரியாகவும் இருக்கிறார்.

மேற்கு மண்டலத்திற்கு உள்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகர பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்கவும், சாலை விபத்துகளை குறைக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஏ.டி.ஜி.பி. மாகாளி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் கோவை புறநகர் மற்றும் கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து, விபத்து தடுப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. மாகாளி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட காவல் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், கூடுதல் காவல் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை காவல் சூப்பிரண்டுகள், காவல் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இராமலிங்கம், வெங்கடேசன், ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் ஈரோடு மாவட்ட சாலைகளின் தன்மை, அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள், விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. மாகாளி கேட்டறிந்தார். விபத்துகளை தடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர் பேசினார்.

இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி. மாகாளி தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்ட அளவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் தேவையான கூடுதல் வசதிகளை செய்ய அனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவது குறித்து பேசப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் இந்த கூட்டத்தில் அழைக்கப்பட்டு இருந்தனர்.

பொதுவாக இந்த கூட்டம் விபத்துகளை தடுக்கவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பானதுதான். எனவே பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு விழிப்புணர்வு கல்வி ஏற்படுத்துவதை முக்கியமாக கொண்டு இருக்கிறோம்.

அதுபோல் சாலைகள் விரிவாக்கம், சிக்னல்கள் அமைத்தல், வேகத்தடைகள், நடைபாதைகள் அமைக்கும் ஏற்பாடுகளை செய்வது குறித்தும் பேசி இருக்கிறோம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மாதாந்திர போக்குவரத்து பாதுகாப்பு கூட்டத்தில் பேசி நடைமுறைப்படுத்தப்படும்.

வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்க வேண்டும்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும்.

கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க வேண்டும் என்று காவலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூடுதல் டி.ஜி.பி. மாகாளி தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

மனோஜ் பாண்டியன், வைத்தியை தொடர்ந்து முக்கிய பிரமுகர் அதிமுகவில்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.. குஷியில் இபிஎஸ்!
விஜய் அ.தி.மு.க தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்து பவன் கல்யாண் மாதிரி வரணும் - நடிகை கஸ்தூரி