
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனருக்கு இ-மெயிலில் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த நார்மன் ஜெப் என்ற பெண், சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ள புகாரில், சென்னை, சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் என்பவர், என்னைத் திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார். அவரும் நானும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தோம். அவர் மூலம் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, என்னை தாய்லாந்தில் விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
மேலும், மனோஜ் ஜெயினின் நண்பரான விகாஸ் கோத்தாரி என்பவர், என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர். அவர் மீதும் நடவடிக்கை எடுக் வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இது குறித்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
போலீசார் இது குறித்து கூறுகையில், நார்மன் ஜெப், தாய்லாந்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார் என்றும், 2011 ஆம் ஆண்டு தாய்லாந்தில், தொழிலதிபர் மனோஜ் ஜெயினை, நார்மன் ஜெப் சந்தித்துள்ளார். அப்போது நார்மனை திருமணம் செய்து கொள்வதாக மனோஜ் ஜெயின் உறுதி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து கணவன்-மனைவிபோல் வாழ்ந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்க ஒரு மகனும், மகளும் பிறந்தனர். பாங்காங்கில் உள்ள ரிஜிஸ்டர் ஆபிசில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், மனோஜ் ஜெயினின் நண்பர்கள் விகாஸ் கோத்தாரி, சந்தோஷ் ஆகியோர் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். அப்போது விகாஸ் கோத்தாரி, நார்மனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதன் பிறகு மனோஜ் ஜெயினுக்கும் நார்மனுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மனோஜ் ஜெயின் சென்னைக்கு வந்துவிட்டார். அவரைத் தேடிய நார்மன் ஜெப், தாய்லாந்து போலீசில் புகார் அளிக்க திருமண சான்றிதழைப் பார்த்துள்ளார். அதில் கணவர் மனோஜ் ஜெயினுக்குப் பதிலாக அவரின் நண்பர் சந்தோஷ் கையெழுத்திட்டுள்ளது தெரியவந்தது. இந்த விவரம் அண்மையில்தான் நார்மனுக்கு தெரியவந்தது. இதையடுத்து, நார்மன் ஜெப், தாய்லாந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சந்தோஷை விவாகரத்து செய்துள்ளார்.
இந்த நிலையில், தன்னை ஏமாற்றிய மனோஜ் ஜெயின் மற்றும் அவரின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு இ-மெயிலில் புகார் அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடத்தி, மனோஜ் ஜெயின், விகாஸ் கோத்தாரி இருவர் மீதும் கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு வதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளோம். நார்மன் திருமண பதிவு சான்றிதழில் கணவன்போல் கையெழுத்திட்ட மனோஜின் நண்பர் சந்தோஷையும் தேடி வருகிறோம் என்று கூறினார்.