
அரியலூர்
அரியலூரில் வயல்களில் மர்மமான முறையில் ஒன்பது மயில்கள் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர் வனத்துறையினர்.
அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் செல்வராஜ் மற்றும் ரங்கநாதன் ஆகியோரின் வயல்களில் மூன்று ஆண், ஆறு பெண் என மொத்தம் ஒன்பது மயில்கள் மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தன.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் கணேசன், வனவர் சக்திவேல், வனகாப்பாளர்கள் சந்திரசேகரன், தனவேல் ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்று இறந்து கிடந்த மயில்களை மீட்டு கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.
விளைநிலங்களிலுள்ள பயிரை மயில்கள் சேதப்படுத்துவதால் ஆத்திரத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் விஷம் வைத்து கொன்றனரா? அல்லது வேறு எதாவது தேவைகளுக்காக கொல்லப்பட்டதா? என்ற கோணங்களில் வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்தப் பகுதியில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.