முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் விவகாரம்.. ராமநாதபுரம் டி.ஆர்.ஓ வசம் ஒப்படைப்பு

Published : Oct 26, 2022, 08:48 PM IST
முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் விவகாரம்.. ராமநாதபுரம் டி.ஆர்.ஓ வசம் ஒப்படைப்பு

சுருக்கம்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ. வசம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை டி.ஆர்.ஓ மற்றும் நினைவிட பொறுப்பாளர் ஆகியோர் வங்கியில் கையெழுத்திட்டு கவசத்தை பெற்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்:

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பர்.

இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

அதிமுக சர்ச்சை:

அதிமுக உட்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக கடந்த செப்டெம்பர் 30 அன்று வங்கிக்கு நேரில் வந்து கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

பின் அக்டோபர் 3 அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், தர்மர் ஆகியோரும் தங்க கவசத்திற்கு உரிமை கோரி பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

மதுரைக் கிளை:

இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் கவசத்தை தர வங்கி நிர்வாகம் மறுத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அக்டோபர் 18-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதே வழக்கில் இடையீட்டு மனுவாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் அதிரடியாக களத்தில் குதித்த சிபிசிஐடி

நீதிமன்றம் உத்தரவு:

இந்த மனுக்களை இன்று (அக்டோபர் 26) விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இரு தரப்பினர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவருக்கும் கவசத்தை தர உத்தரவிட மறுப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்க கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

வருவாய் அலுவலரிடம் ஒப்படைப்பு:

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மதுரை அண்ணாநகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு வந்த மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு கவசத்தை பெற்றனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்பில், கவசம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேவர் சிலைக்கு கவசம் சார்த்தப்பட்டு அக்.28,29,30 ஆகிய மூன்று நாட்கள் குருபூஜை விழா முடிந்து நவம்பர் 1 ஆம் தேதியன்று மீண்டும் தங்க கவசம் இதே நடைமுறையின் படி வங்கி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்படும்.

இதையும் படிங்க..ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 29 December 2025: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு..!
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை.. இதோ லிஸ்ட்..!