
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் உட்புற நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரை மாணவரின் உறவினர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நோயாளி உயிரிழக்க வில்லை என ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயணசாமி தெரிவித்தார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் சென்னை சென்ரல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதே சுதாகர் இறந்ததிற்கு முழு காரணம் என்று கூறி சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் கண்டனம் தெரவித்தனர்.
இதையடுத்து மருத்துவரை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர், போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராயபேட்டையை சேர்ந்த குமரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதற்கான விளக்கத்தை தமிழக அரசு இன்று அளித்தது. அதில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்கள் எனவும், பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.