
தமிழகத்தில் வரும் மே மாதம் 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மே மாதம் 14ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் இது குறித்து ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பது சிரமம் என்று தெரிவித்தார்.
"மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது."
"அவற்றின் அடிப்படையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்" அவர் விளக்கமளித்தார்.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.