
காரியாபட்டி
வருகிற 22-ஆம் தேதி நடக்க இருக்கும் உண்ணாவிரதத்தில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டனர்.
சட்டசபயில் திமுகவின் எம்எல்ஏ-க்கள் தாக்கப்பட்டனர். குண்டு கட்டாக தூக்கி சட்டசபையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து வருகிற 22–ஆம் தேதி (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி விருதுநகர் அம்மன் திடலில் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமையிலும், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலையிலும் உண்ணாவிரதம் நடக்க இருக்கிறது.
இந்த உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டனர்.
மேலும் அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஒன்றிணைந்த மாவட்ட செயற்குழுகூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.