
காணை, கோலியனூர் ஒன்றியங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஆட்சியர் சுப்பிரமணியன் “சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்காக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் சீமை கருவேல மரங்களை மதிப்பீடு செய்து வெளிப்படையான ஏலம் விட்டு உள்ளாட்சி அமைப்புகளில் எவ்வித செலவினம் மேற்கொள்ளாமலும், அரசுக்கு வருவாய் ஈட்டத்தக்க வகையிலும் அரசு விதிமுறைப்படி சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
காணை ஒன்றியம் வெங்கந்தூர் ஊராட்சி, கோலியனூர் ஒன்றியம் மாதிரிமங்கலம், பொன்னேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் இருக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இதனை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது “பணிகளை விரைந்து முடிக்குமாறும், முற்றிலும் சீமை கருவேல மரங்களை அகற்றுமாறும்” அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.