
திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்து உள்ள செங்கம் எனும் பகுதியில் பாச்சல் எனும் கிராமம் இருக்கிறது. அங்கு வசிக்கும் சிவக்குமார் தம்பதியர் பிறந்து இரண்டு நாட்களே ஆன தங்கள் குழந்தையை, தாங்களே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சிவக்குமார் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சிலதினங்களுக்கு முன் இவர்களுக்கு மூன்றாவதாக ஒரு பெண்குழந்தை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைத்து பிறந்தது. மூன்றாவதும் பெண்குழந்தையாகிவிட்டதே, என வருந்திய சிவகுமார் மற்றும் அவரது மனைவி, தங்கள் குழந்தையை கொல்ல அப்போதே திட்டமிட்டிருக்கின்றனர்.
அதன்படி அந்த குழந்தை வீட்டிற்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக நாடகமாடி இருக்கின்றனர். அதன் பிறகு அந்த குழந்தையை தங்கள் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்திருக்கின்றனர். இவர்களின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை அடுத்து அங்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார், குழந்தை எரிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையின் போது, சிவகுமார் தான் குழந்தையை கொன்றிருக்கிறார் எனும் திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறது. பெண் சிசுக்கொலையை தடுக்க அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், நாட்டில் இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழ்வதை மட்டும் தடுக்க முடியவில்லை. இது மக்களின் மனதில் இன்னமும் இருக்கும் மூட நம்பிக்கையையும், முட்டாள் தனத்தையுமே காட்டுகிறது.