
காவிரிப் பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் தேவையில்லை என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
முதலமைச்சா ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலோ மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை மூலம் அடிக்கடி தெரிவித்து வருகிறது.
இதைதொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனை சென்றனர். ஆனால், அவரை பார்க்க முடியவில்லை. பின்னர், அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களை சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இதற்கிடையில், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜைகள், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று சென்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் நலம் பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது முதல்வர் நலம் பெற எல்லோரும் பிரார்த்திப்பதுதான் முக்கியக் கடமை.
காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அரசியல்ரீதியான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்த அன்றே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக வரும் 18ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
இந்தச் சூழ்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ அல்லது சட்டப்பேரவைக் கூட்டத்தையோ கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டபோது முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, "கருணாநிதி எதை வேண்டுமானாலும் கூறுவார். அவரை முதல்வர் ஆக்கினால் மட்டுமே அமைதியாக இருப்பார். அவர் கூறுவதைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என்றார் .