Minister L. Murugan : பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்கும் பல்லடம் மாநாடு, தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் நடத்தாத வகையில் பிரமாண்டமாக நடைபெறும் என்று கூறியுள்ளார் எல். முருகன்.
இன்று பிப்ரவரி 25ம் தேதி சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் இருந்து சென்னை வந்த நிலையில் விமான நிலையத்தில் பாஜகவினர் மேள தாளம் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். தமிழகத்தின் பிரதிநிதி ஒருவருக்கு இரண்டாவது முறையாக ராஜ்யசபா பதவி கொடுத்துள்ளனர். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதால் பிரதமர் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளனர். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து மீண்டும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
undefined
எனக்கு முன்பாக தமிழகத்தை சேர்ந்த இல. கணேசனும், அவருக்கு முன்பாக வாஜ்பாய் காலத்தில் மேலும் ஒருவரும் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மத்தியப் பிரதேச மாநில பாஜக தமிழகத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து மாநிலங்களவைக்கு அனுப்பி வருகிறது. நாளை மறுநாள் பிரதமர் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். தமிழக அரசியலையே மாற்றும் வகையில் இந்த யாத்திரை அமைந்துள்ளது.
வேல் யாத்திரை மூலம் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றதைப்போல "என் மண் என் மக்கள்" யாத்திரை மூலம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற உள்ளோம். இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் பிரதமர் பங்கேற்கும் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்ததை அன்போடு வரவேற்கிறோம். வேட்பாளர், கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைமை முடிவு எடுக்கும்.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க வேண்டும் என்பதே பாஜக விருப்பம். திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி உட்பட அனைத்தையும் உயர்த்தியுள்ளதால் மக்கள் கோபத்தில் உள்ளனர். 40 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்" என்று கூறினார்.