
சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கான தேவை தமிழக விவசாயிகளிடையே அதிகரித்திருப்பதால் நடப்பாண்டில் சோலார் மோட்டார் பம்பு செட்டுகள் 1,000 விவசாயிகளுக்கு 90 % மானியத்தில் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வேளாண்மைத் துறை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது, தற்போது நிலவி வரும் வறட்சியினை கருத்தில் கொண்டு, குறைந்த நீரில் அதிக விளைச்சலும், விவசாயிகளுக்கு வருமானமும் தரும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிப்பதற்கு நடப்பாண்டில் 22 மாவட்டங்களில், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறி பயிர்களில் வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் உயர் விளைச்சல் ரக சாகுபடி 11,250 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கான தேவை தமிழக விவசாயிகளிடையே அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு, நடப்பாண்டில் சோலார் மோட்டார் பம்பு செட்டுகள் 1,000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.