பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலை விவசாயிகள் கூடலூரில் ஆர்ப்பாட்டம்…`

First Published Jul 12, 2017, 9:38 AM IST
Highlights
Tea farmers demonstrate various demands in koodalur


நீலகிரி

பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.25-ஐ குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் பச்சைத் தேயிலை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் தேயிலை விவசாயம் நலிவடைந்து வருகிறது. இதனால் பச்சைத் தேயிலைக்கு கட்டுப்படியான வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேயிலை விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சளிவயல், புளியாம்பாரா, ஸ்ரீமதுரை, எல்லமலை, ஆரோட்டுப்பாறை, செல்வபுரம், காந்திநகர் உள்பட 13 கிராமங்களைச் சேர்ந்த சிறு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் சளிவயல் சாஜி தலைமை வகித்தார். செயலாளர் ரிச்சர்டு, பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது “பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.25 நிர்ணயம் வேண்டும்.

அனைத்து தேயிலை விவசாயிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.

சிறு, குறு தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்க மானியம் வழங்க வேண்டும்.

ரசாயன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை வாபஸ் பெற வேண்டும்”

தேயிலை ஏல மையங்களில் தேயிலைத் தூளுக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும்.

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள இன்கோசர்வ், டேன்டீ நிறுவனங்கள் குறைந்த விலையில் தேயிலைத்தூள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

பட்டா இல்லாத நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் விவசாய பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் சளிவயல் சாஜி கூறியது:

“கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு கிடைத்த விலை இப்போது கிடைப்பது இல்லை. 1997–ஆம் ஆண்டு பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ.22 கிடைத்தது. ஆனால் இன்றைக்கு அதில் பாதி விலை மட்டுமே கிடைக்கிறது.

உற்பத்தி செலவு, கூலி, உரங்களின் விலை உயர்வு என பல மடங்கு அதிகரித்து விட்டது. தேயிலை விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

இதனைக் கண்டித்தும், பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலை ரூ.25 நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது” என்று அவர் கூறினார்.

click me!