ஈரோட்டில் ஏழு இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு - வேளாண்துறையினர் அறிவிப்பு...

First Published Feb 9, 2018, 9:48 AM IST
Highlights
Paddy procurement centers opened in seven places in Erode - Report of Agriculture


ஈரோடு

ஈரோட்டில் முதற்கட்டமாக ஏழு இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுகிறது என்று வேளாண் துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

வேளாண் துறையினர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த செய்திக்குறிப்பில், “நடப்பஆண்டில் நன்செய் சாகுபடிக்காக பவானிசாகர் அணையில் இருந்து அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 2-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

கீழ்பவானி, காலிங்கராயன், கொடிவேரி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக மூன்று பாசனப் பகுதியிலும் நெல் அறுவடையாகும்போது அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இந்தாண்டி இதுவரை 14 நெல் கொள்முதல் மையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அதில், பிப்ரவரி 8-ஆம் தேதியிலிருந்து (அதாவது நேற்று) 7 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்படி, காசிபாளையம் (கோபி), அத்தாணி, கள்ளிப்பட்டி, ஏளுர், புதுவள்ளியம்பாளையம், டி.என்.பாளையம், என்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுதவிர கீழ்பவானி பாசனத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை, கே.ஜி.வலசு, எழுமாத்தூர், பி.மேட்டுப்பாளையம், பெரியபுலியூர் பகுதியிலும், கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட புதுக்கரைப்புதூர், கூகலூர் ஆகிய 7 இடங்களிலும் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பகுதிகளில் இன்னும் நெல் அறுவடைக்குத் தயாராகாததால் முதல்கட்டமாக அறுவடைக்குத் தயாராக உள்ள 7 இடங்களில் மட்டும் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் ஒவ்வொரு மையத்துக்கும் தலா 2 ஊழியர்கள் வீதம் பணியமர்த்தப்படுவர். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை ரகத்துக்கு ஏற்ப 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் என்ற அளவீட்டில் பதர்கள், காய்கள் இல்லாத நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்ன ரக நெல் ஒரு கிலோ ரூ. 16.60-க்கும், மோட்டா ரக நெல் ரூ.16-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கு ஈ.சி.எஸ். மூலமாக விவசாயிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்” என்று வேளாண் துறையினர் அதில் தெரிவித்து இருந்தனர்.

click me!