
ஈரோடு
ஈரோட்டில், கொலை மிரட்டல் விடுத்ததாக வட்டார போக்குவரத்து அதிகாரியும், தரக்குறைவாக பேசி தாக்கியதாக பொக்லைம் எந்திர ஓட்டுநரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பாண்டியன், துணை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக பொக்லைன் எந்திரம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர், அதன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பொக்லைன் எந்திரத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், ஆவணங்கள் அதன் உரிமையாளரிடம் இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திர உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து வரும்படி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், உரிமையாளர் வரவில்லையாம்.
இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த ஒருவர் பொக்லைன் எந்திரத்தின் முன்பு காரை நிறுத்தினார்.
பின்னர், அந்த நபர், ‘என் அனுமதி இல்லாமல் எப்படி பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச் செல்லலாம்’? என்று கூறி வட்டார போக்குவரத்து அதிகாரியை மிரட்டியுள்ளார். மேலும், என்னை மீறி எடுத்துச் சென்றால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி பாண்டியன் சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், பொக்லைன் எந்திர ஓட்டுநர், சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், “பெருந்துறை சிப்காட்டில் இருந்து ஈங்கூருக்கு நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரத்தை ஓட்டிச்சென்றேன். ஈங்கூர் பகுதியில் சென்றபோது பொக்லைன் எந்திரத்தை போக்குவரத்து அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார்.
பின்னர், பொக்லைன் எந்திரத்தின் ஆவணங்களை கேட்டார். அதற்கு நான் ஆவணங்கள் பொக்லைன் எந்திர உரிமையாளரிடம் உள்ளது என்று கூறினேன். அப்போது அந்த அதிகாரி என்னை தரக்குறைவாக பேசி, என்னை அடித்தார். இதனால் நான் சென்னிமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
எனவே, என்னை திட்டி, தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இப்படி இரண்டு பேரும் ஒவ்வொரு கதை சொல்லுகின்றனர். இந்த இரண்டு புகார்கள் மீதும் சென்னிமலை காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.