3500 மெட்ரிக் டன் நெல் நாசம்... அலட்சியமே காரணம்... விவசாயிகள் குற்றச்சாட்டு!!

Published : Mar 08, 2022, 05:47 PM IST
3500 மெட்ரிக் டன் நெல் நாசம்... அலட்சியமே காரணம்... விவசாயிகள் குற்றச்சாட்டு!!

சுருக்கம்

மயிலாடுதுறையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 3500 மெட்ரிக் டன் நெல் மழை நீரில் நனைத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தின் பல பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சரிவர பராமரிக்காததாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் சேதமடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 3500 மெட்ரிக் டன் நெல் மழை நீரில் நனைத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மணல் மேடு கிராமத்தில் தமிழக வாணிப கழகத்தின் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. சீர்காழியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்படும் 3500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இந்த திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த நெல் சேமிப்பு கிடங்கு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் பெரும் சேதத்தை சந்தித்தது.

சேமிப்புக் கிடங்கு முழுவதும் தண்ணீர் தேங்கியதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து முளைக்கத் தொடங்கின. இதை அடுத்து மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு செய்து தாழ்வான பகுதியில் இயங்கி வந்த இந்த சேமிப்புக் கிடங்கை மூடுவதற்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சேமிப்பு கிடங்கை மூடி நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக ஆட்சியரிடம் உத்தரவாதம் அளித்து இருந்தனர். ஆனால் 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை நெல் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றப்படாமல் உள்ளது.

அதுமட்டுமின்றி, கொள்முதல் செய்து வரும் புதிய நெல் மூட்டைகளும் அதே இடத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையில் நனைத்து நெல்மூட்டைகள் அனைத்தும் வீணாகி வருகிறது. அங்கு தண்ணீர் தேங்கும் என்பதால் அங்கு அடுக்கிவைக்கப்பட்டுள்ள மூட்டைகள் அனைத்தும் நாசமாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு நெல் மூட்டைகள் வீணாகுவதாகவும், ஆட்சியர் உத்தரவின் படி உடனடியாக திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை வேறு இடத்திற்கு மற்ற வேண்டும் என்றும், ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 16 January 2026: ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!