
சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜின் மண்டையை மாணவர்கள் உடைத்ததால் 36 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஏ கிரேடு கல்லூரியான பச்சையப்பன் கல்லூரி கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.
எப்போதும் கல்லூரி விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருவது வழக்கம். அதன்படி இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் கல்லூரி நுழைவுவாயிலில் நுழைய முயன்றனர்.
இதைபார்த்த அங்கிருந்த போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டது.
தகராறில் மாணவர்கள் போலீசாரின் மீது கல்வீச்சு நடத்தினர். அப்போது பிரச்னையை தீர்க்க வந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் தாக்கப்பட்டார்.
இதில் முதல்வரின் மண்டை உடைந்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து 6 மாணவர்கள் உள்ளிட்ட 36 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.