
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கண்டு வியந்தேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அண்ணா நூலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட இந்த நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையப் பெற்றது. ஒன்பது தளங்களுடன் உள்ள இந்த நூலகத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு பிரிவு உள்ளது. இதன்படி சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு, இணைய நூலகம், ஓலைச்சுவடிகள் என பல பிரிவுகள் உள்ளன. மேலும் நூலகத்துக்குள் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அரங்கமும் உள்ளது. இந்த நூலகம் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், நூலகம் பழைய பொலிவை மீண்டும் பெற்றுள்ளது.
வியந்த ப. சிதம்பரம்
இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், தமிழ்ப் புத்தாண்டு அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு சென்றிருந்தார். அந்த நூலகத்தைப் பார்வையிட்ட ப.சிதம்பரம், நூலகத்தை சிலாகித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம். இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்க வைத்தன. எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன்” என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.