இந்த ஆணையை வெச்சிக்கிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது -  தமிழக அரசை புரட்டி எடுத்த மதுரை உயர்நீதிமன்றம் 

 
Published : Jun 14, 2018, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இந்த ஆணையை வெச்சிக்கிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது -  தமிழக அரசை புரட்டி எடுத்த மதுரை உயர்நீதிமன்றம் 

சுருக்கம்

order can not be close sterlite plant - Madurai High Court gives idea to tamilnadu government

மதுரை
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை தெளிவாக இல்லை.  எனவே, அதனை ஒரு கொள்கை முடிவாக எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஏப்ரல் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

அதன்பின்னர் கடந்த மாதம் 22–ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலாளர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 

பலியானவர்களுக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என்று ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வாறு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 வழக்குகள், நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் உயிரை மதிப்பிட முடியாது’’ என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வைகோவும் நேரில் வந்திருந்தார். அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதாடியது: ‘‘கடந்த மாதம் 28–ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது. 

மீண்டும் புதிதாக அனுமதி கொடுக்கவில்லை என்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48–வது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். 

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்களை விளக்கமாக பட்டியலிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 48–வது பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போது தான் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும்.’’ என்று அவர் வாதாடினார்.

அப்போது நீதிபதிகள், ‘‘காற்று, தண்ணீர் சட்டப்பிரிவுகளின்கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 48–வது பிரிவை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இல்லை. 

எனவே, அதை ஒரு கொள்கை முடிவாக எடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு இந்த நீதிமன்றம் யோசனை கூறுகிறது. இந்த யோசனையை தமிழக அரசுக்கு அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!