
அதிமுக தொண்டர்களை சந்திக்கும் ஓபிஎஸ்ன் இந்த சுற்றுப் பயணத்தை அந்த அணியினர் திட்டமிட்டு செயல்படுத்தி வருவதால், ஓபிஎஸ்ன் காஞ்சிபுர முதல் கூட்டம் வெற்றிரமாக அமைந்தது
நீதி கேட்டு நெடிய பயணம் என்ற பெயரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை ஓபிஎஸ் அணியினர் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தனர். ஓபிஎஸ் வரும்போது ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் ஓபிஎஸ் அணியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்ததனர்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டு அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதன்மூலம் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டு கட்சிக்கு பலம் சேர்க்க முடியும் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஓபிஎஸ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தர்மயுத்தத்தின் முதல் கூட்டத்தினை தொடங்கியிருக்கிறோம். இந்த தர்மயுத்தத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தந்துகொண்டிருக்கிறார்கள். பேராதரவு வெட்டவெளிச்சமாக அனைத்து நிலைகளிலும் தெரிந்துகொண்டிருக்கிறது. எனினும் ஆட்சி நடத்தி வருபவர்கள் புரிந்தும், புரியாதவர்கள்போல கண்கள் திறந்திருந்தும் தூங்கியவர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி அரசை கிண்டல் செய்தார்..
கடந்த 5 ஆண்டுகாலமாக ஜெயலலிதா செய்த சாதனையால்தான், ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கிறது. ஜெயலலிதா நோய்வாய்பட்டு 75 நாள் சிகிச்சை பெற்றபோதும், மரணமடைந்துவிட்டார் என்பது தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், அ.தி.மு.க. தொண்டர்களையும் பாதித்துள்ளது. என தெரிவித்தார்
ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு விடிவுகாலம் பெற, அந்த மர்ம முடிச்சை அவிழ்க்கவேண்டும். அதற்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தர்மயுத்தத்தை தொடங்கினோம். இதுதான் முதல் கோரிக்கை என தெரிவித்த ஓபிஎஸ்,. இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கமாக இருக்க வேண்டும். யாருடைய குடும்பத்தின் கையிலும் சிக்கக்கூடாது என கூறினார்.