முதல்வர் ஓபிஎஸ்சுடன் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்‍ குழுவினர் சந்திப்பு

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
முதல்வர் ஓபிஎஸ்சுடன் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்‍ குழுவினர் சந்திப்பு

சுருக்கம்

முதலமைச்சர்​ ஓ. பன்னீர்செல்வத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்‍ குழுத் தலைவர் Shinichi Kitaoka தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்‍கு இரங்கல் தெரிவித்த அவர்கள், முதலாம் கட்ட தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இந்த நிதியாண்டில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்‍ குழுத் தலைவர் Shinichi Kitaoka தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். ஜப்பான் நாட்டு குழுவினரை தலைமைச் செயலாளர் டாக்‍டர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். முதலமைச்சர் ஜெ மறைவுக்‍கு, ஜப்பான் குழுவினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா, மக்‍களிடையே மிகப் பெரிய வசீகர ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார் என்றும் புகழாரம் சூட்டினர். அண்மையில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளுக்‍கும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தனர்.

ஜெ  மறைவால் ஏற்பட்டுள்ள துயரமான நேரத்தில் இந்த சந்திப்பு நடப்பதாக தெரிவித்த முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு குழுவின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் முதல், சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை, கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தொடங்கி வைத்ததுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சி என்பதையும் நினைவுகூர்ந்தார்.

ஜப்பான் நாட்டின் முதலீட்டுக்‍கான மிகவும் சிறந்த இடமாக தமிழகம் திகழ்வதாகவும், 500-க்‍கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் அப்போது சுட்டிக்‍காட்டிய ஓபிஎஸ் , ஜெயலலிதா தொடங்கிய தமிழ்நாடு 2023 தொலைநோக்‍கு திட்டம் உள்ளிட்ட அனைத்து லட்சியத்தையும் தமிழக அரசு நிறைவேற்றும் என குறிப்பிட்டார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டம், ஒகேனக்‍கல் குடிநீர் திட்டம், தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்‍ குழுவின் உதவியோடு நடைபெற்று வெற்றிகரமாக வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், சென்னை - பெங்களூரு இடையிலான தொழில் பூங்கா திட்டத்திற்கு ஜப்பான் குழு ஆதரவு அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.

சென்னையில் 88 கோடி ரூபாய் செலவில், குழுந்தை மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்க நிதியுதவி அளித்ததற்காக ஜப்பான் சர்வதேச குழு தலைவருக்‍கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்தார். நவீன வசதிகளைக்‍ கொண்ட இந்த மையம், செயல்படுவதற்கு தற்போது தயாராக உள்ளதாகவும், இதன்மூலம் மாநிலத்தில் உள்ள ஏ​ழை மக்‍கள் மிகப் பெரும் அளவில் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னையில் நாள் ஒன்றுக்‍கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்‍கும் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்‍கம், 2-ம் கட்ட தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம், சென்னை புறவழிச்சாலை திட்டம் மற்றும் சென்னை உள்கட்டமைப்பு திட்டம் ஆகியவற்றுக்‍கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு குழு விரைந்து ஒப்புதல் அளிக்‍கவேண்டும் என்றும் ஓபிஎஸ் அப்போது வலியுறுத்தி கேட்டுக்‍கொண்டார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு குழுவின் ஒத்துழைப்புடன் மேம்பாட்டுத் திட்டங்களை மிகச் சரியாக நிறைவேற்றவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக ஜப்பான் குழு பாராட்டு தெரிவித்தது. முதலம்கட்ட தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்‍கத்திற்கான ஒப்புதல் இறுதிநிலையில் உள்ளதாகவும் ஜப்பான் குழு தெரிவித்தது.

இந்த சந்திப்பின்போது, ஜப்பான் குழுவின் தெற்கு ஆசிய தலைமை இயக்‍குநர் Arai Toru, இந்தியக்‍ குழுவின் தலைவர் Sakamoto Takema உள்ளிட்டோரும், அமைச்சர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி, எம்.சி. சம்பத், விஜயபாஸ்கர், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!