
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 250க்கு மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. அதற்கு, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அரசு சார்பில் முதலமைச்சரோ மற்ற யாரும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இதனால், நேற்று இரவு முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தற்போது தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுடன் ஆலோசனை நடத்த வருகிறார். இன்னும் சிறிது நேரத்தில், முதல்வர் ஒ.பி.எஸ்., போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரிமாணவர்களை சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர் பார்க்கப்படுகிறது.