பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கிய மனுவின் சிறப்பம்சம்!

First Published Dec 19, 2016, 8:58 PM IST
Highlights


பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கிய மனுவின் சிறப்பம்சம்!

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்‍கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றும் புயல் நிவாரணத்திற்கு உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்றும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்‍கவேண்டும் என்றும் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார்.

தமிழக முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் அளித்த மனுவில், வர்தா புயலால் சென்னை உள்ளிட்ட வடக்‍கு மாவட்டங்கள் மிகக்‍ கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது -

புயல் தாக்‍கியபோது மணிக்‍கு 140 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்‍காற்று வீசியதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது - தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை முழுமையாக மேற்கொண்டதன் விளைவாக, புயலின் தாக்‍கத்தால் ஏற்பட்ட சேதம் குறைக்‍கப்பட்டுள்ளது -

உயிர்ச்சேதமும் பெருமளவில் குறைக்‍கப்பட்டது - மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்‍கைகள் போர்க்‍கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன - புயலால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்ய 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் தேவை என தமிழக அரசு மதிப்பிட்டுள்ளது -

இதில், உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை தேசியப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து வழங்கவேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வுசெய்ய மத்தியக்‍ குழுவை அமைத்துள்ளதற்காக பிரதமருக்‍கு நன்றி - நிவாரணப் பணிகளை வேகமாக முடிக்‍க மத்திய அரசு விரைந்து நிதியுதவி அளிக்‍கவேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது -

மேலும், தமிழகத்தின் நலன்சார்ந்த 29 முக்‍கிய பிரச்னைகள் தொடர்பான கோரிக்‍கைகளும் முன்வைக்‍கப்பட்டுள்ளன - மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் வலியுறுத்தி வந்த காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமை‍க்க வேண்டும் -

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுக்‍க வேண்டும் - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் -

அத்திக்‍கடவு-அவினாசி திட்டம், நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற விரைந்து நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் - 

பாக்‍ நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்கவேண்டும் -

ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்‍கீடு செய்யவேண்டும் - மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்‍கவேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்யூர் பெரு மின்திட்டம், காற்றாலை மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்‍கு கொண்டுசெல்ல பசுமை வழித்தடம் - வேளாண்மையில் சூரிய மின்னாற்றலைப் பயன்படுத்த அதிக மானியம் வழங்கவேண்டும் -

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், மாதத்திற்கு கூடுதலாக 85 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது - இந்த கூடுதல் அரிசியை கிலோ 8 ரூபாய் 30 பைசாவுக்‍கு வழங்கவேண்டும் -

தமிழகத்திற்குத் தேவையான மண்ணெண்ணையை ஒதுக்‍கீடு செய்யவேண்டும் -

பொது விநியோகத்தில் நேரடி மானியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை திருத்தி அமைக்‍க வேண்டும் - 14-வது நிதிக்‍குழுவின் பாரபரட்ச நடவடிக்‍கையால் தமிழகத்துக்‍கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய ஆண்டுக்‍கு 2 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்‍கீடு அளிக்‍க வேண்டும் - 2012ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு அளிக்‍க வேண்டிய இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் -

மருத்துவ மாணவர் சேர்க்‍கைக்‍கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் NEET தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்‍கு எதிராக இருப்பதால், தமிழகத்திற்கு இத்தேர்வில் இருந்து விலக்‍கு அளிக்‍க வேண்டும் -

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்‍க வேண்டும் -

ஜல்லிக்‍கட்டு போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்‍கைகளை எடுக்‍க வேண்டும் - தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்‍கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் - தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்‍கு இரட்டைக்‍ குடியுரிமை வழங்க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - பிற மதங்களுக்‍கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்‍களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்‍க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மனுக்‍களைப் பெற்றுக்‍கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழகத்தின் கோரிக்‍கைகள் குறித்து விரைந்து நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்‍கு பாரத ரத்னா விருது வழங்கவும், நாடாளுமன்ற வளாகத்தில் முதலமைச்சர் அம்மாவுக்‍கு முழு திருவுருவ வெண்கலச் சிலை நிறுவவும் விரைந்து நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் உறுதியளித்தார். ​

tags
click me!