
நீலகிரி
நூறு வருடத்தை தொட்ட பழமை வாய்ந்த ஊட்டி மலை இரயிலில் பயணம் செய்ய வேண்டி நீண்ட வரிசையில் உற்சாகத்துடன் காத்திருந்து சுற்றுலா வாசிகள் பயணிக்கின்றனர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின்போது மலை மாவட்டமான நீலகிரியில் இரயில் பாதை அமைக்க திட்டம் போட்டனர். செங்குத்தான மலைப் பகுதிகள் இருந்ததால், இரயில் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இரயில் பாதை அமைக்கப்பட்டு மலை இரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனையடுத்து குன்னூர் - ஊட்டி இடையே இரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த 1908-ஆம் ஆண்டு மலை இரயில் சேவை துவங்கியது. மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இரயில் பாதை மொத்தம் 46 கிலோ மீட்டர் ஆகும்.
இந்த பாதையில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்களை கடந்து மலை இரயில் வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி என்ஜின் மூலமும், குன்னூர் - ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலமும் மலை இரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டிக்கு 11.50 மணிக்கு மலை இரயில் வந்தடைகிறது.
மலை இரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் ஊட்டி - குன்னூர் ஒரு நபருக்கு ரூ.10, ஊட்டி - மேட்டுப்பாளையம் ரூ.15, முன்பதிவு டிக்கெட்டுகள் ஊட்டி - குன்னூர் ஒரு நபருக்கு ரூ.25, ஊட்டி - மேட்டுப்பாளையம் ரூ.30 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஐந்து பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ள இந்த மலை இரயிலில் 240 இருக்கைகள் உள்ளன. நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை இரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய நிலையை வழங்கி உள்ளது.
தற்போது கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை இரயிலில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி இரயில் நிலையத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலை இரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுக்க சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு காவலர் பாதுகாப்புடன் மலை இரயிலில் ஏற்றப்பட்டனர்.
இந்த மலை இரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் ஊட்டியின் இயற்கை அழகு, கேத்தி பள்ளத்தாக்கு, பசுமையான தேயிலை தோட்டங்கள், வனவிலங்குகளை கண்டு இரசிக்கின்றனர். மேலும், குகைகள் வழியாக மலை இரயில் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தையும் கண்டு மகிழ்கின்றனர்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மலை இரயில் தண்ணீர் நிரப்புவதற்காக ஒருசில இரயில் நிலையங்களில் நிற்கும். அப்போது, சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி இயற்கை காட்சிகளை கண்டு இரசித்து மகிழ்கின்றனர். மேலும், மலை இரயில் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர்.