ஊட்டி தனியார் தேயிலை தொழிற்சாலையில் தீவிபத்து; மூன்று மணிநேரம் போராடி தீயணைப்பு; 1½ கோடி பொருட்கள் நாசம்...

First Published Mar 10, 2018, 9:27 AM IST
Highlights
Ooty fires in the private tea factory Three hours fighting fire one and half crore products destroyed


நீலகிரி

ஊட்டி தனியார் தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மூன்று மணிநேர போராட்டத்திற்கு தீ அணைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி கோரிசோலாவில் குன்னூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமாக இரண்டு மாடிகளைக் கொண்ட தேயிலை தொழிற்சாலை ஒன்று உள்ளது. 

இரும்பு தூண்களாலான இந்தத் தொழிற்சாலையின் கட்டடத்தின் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேயிலை தொழிற்சாலையில் பலவகையான தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தொழிற்சாலையில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதை நேரடியாக காண்பதுடன், அங்கு வழங்கப்படும் தேநீரை குடித்து பார்த்து தேயிலைத்தூளை வாங்கிச் செல்கின்றனர். அதற்காக தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தேயிலைத்தூள் விற்பனை மையமும் இயங்குகிறது. 

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தேயிலை தொழிற்சாலையின் ஒரு பகுதியில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து மளமளவென மேல் மாடிகளுக்கும் பரவியது. பின்னர் தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்து மூன்று வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். தீ மளமளவென பற்றி எரிந்ததால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நான்கு தனியார் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. சுமார் மூன்று மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட தரைப்பகுதியில் பச்சை தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் பகுதி, முதல் மாடியில் சாக்லேட் உற்பத்தி செய்யும் பகுதி, 2-வது மாடியில் தோல் மற்றும் கம்பளி ஆடைகள் விற்பனை செய்யும் பகுதி செயல்பட்டு வந்தன. இந்த மூன்று பகுதிகளும் தீயில் எரிந்ததில் அங்கிருந்த பொருட்கள் நாசமாயின. 

கட்டடத்தின் சுவர்கள் இடிந்ததில் இரும்பு தூண்கள் வளைந்தன. மேற்கூரை தகரம் பெயர்ந்து தொங்கியது. எந்திரங்களும் சேதம் அடைந்தன.மேலும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3000 கிலோ பச்சை தேயிலைத்தூள் எரிந்து நாசமானது. 

இந்த பயங்கர தீ விபத்தில் சேதமான பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று தொழிற்சாலை மேலாளர் வரதராஜன் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? என்று இந்த தீவிபத்து குறித்து வழக்குப் பதிந்த ஊட்டி நகர மத்திய காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  

click me!