
பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார், ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீலகிரி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகை புவேனஸ்வரி சர்ச்சையில் சிக்கிய போது அது குறித்து பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நடிகர்கள் சூர்யா, சரத்குமார், விஜயகுமார், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட நடிகர்கள், பத்திரிகையாளர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும், பத்திரிகை ஆர்வலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் ஆஜராகும்படி நடிகர் சூர்யா, சரத்குமார், உள்ளிட்ட 8 பேருக்கு ஊட்டி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் விசாரணைக்கு நடிகர்கள் ஆஜராகாததால், சூர்யா, சரத்குமார், விஜயகுமார், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீலகிரி மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சூர்யா, சரத்குமார், சத்தியராஜ், உள்ளிட்ட 8 பேர் மனுதாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஜூன் 17 ஆம் தேதிக்குள் நடிகர்கள் 8 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், பிடிவாரண்டை ரத்து செய்ய முடியாத என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.