வெங்காய விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு … 450 பிரியாணி கடைகள் அடைப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 5, 2019, 8:04 AM IST
Highlights

வெங்காய விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள 450 பிரியாணி கடைகள் மூடப்பட்டன ஆயிரக்கணக்கான ஹோட்டல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

பிரியாணி என்றாலே நம் அனைவரின் ஞாபத்துக்கு வருவது வேலூர் மாவட்டம் தான். அதுவும் ஆம்பூர் பிரியாணி நம் அனைவரின் எச்சிலையும் ஊறவைக்கும்.  

பிரியாணிக்கு புகழ் பெற்ற திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில்  1,200க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன.  5,000 பேர் வேலை செய்கின்றனர். பிரியாணிக்கு அடிப்படை தேவையான வெங்காயத்தின் விலை தற்போது எப்போதும் இல்லாத வகையில், தினமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயம், 150 ரூபாய்; சின்ன வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்றன.

பிரியாணி கடைகளில், மட்டன், சிக்கன் பிரியாணிக்கு, வெங்காய தயிர் பச்சடி வழங்கப்படும். விலை உயர்வால், 15 நாட்களாக, வெங்காய தயிர் பச்சடியை நிறுத்தி விட்டனர். பிரியாணி விலையும் உயர்ந்து விட்டது. இதனால் விற்பனை குறைந்து விட்டது.

வரலாறு காணாத விலை உயர்வால், வெங்காயம் தயிர் பச்சடி நிறுத்தப்பட்ட நிலையில், மட்டன் பிரியாணி, கால் பிளேட், 140 ரூபாயில் இருந்து, 170 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், விற்பனை குறைந்து விட்டது. தினமும், 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.

இதையடுத்து  450 பிரியாணி கடைகள் மூடப்பட்டுள்ளன. பிரியாணி கடைகளில் வேலை செய்யும், ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

click me!