அதிபயங்கர சத்தத்துடன் வெடித்த ஓ.என்.ஜி.சி குழாய்; பீறிட்டு அடிக்கும் எரிவாயுவால் மக்கள் பிதி...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 11, 2018, 11:02 AM IST
Highlights

இராமநாதபுரத்தில் உள்ள கிராமத்தில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. குழாய் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், குழாயில் இருந்து எரிவாயு பீறிட்டு அடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
 

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்டது தெற்குக் காட்டூர் கிராமம். இங்கு மத்திய அரசிற்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கெயில் நிறுவனம், அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் எரிவாயு எங்கிருந்து என்று ஆராய்ந்து அதனை பூமிக்கடியில் குழாய் பதித்து தெற்குக் காட்டூரில் இருக்கும் எரிவாயுச் சேமிப்புக் கிடங்குக்கு கொண்டுவருகிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். 

எரிவாயுச் சேமிப்புக் கிடங்கில் சேகரிக்கப்படும் எரிவாயு இங்கேயே சுத்திகரிக்கப்படுகிறது.  பின்னர், இங்கிருந்து அருகில் உள்ள கெயில் நிறுவனத்திற்கும், அங்கிருந்து அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் தெற்குக் காட்டூரைச் சேர்ந்த சேதுராமன், ஆறுமுகம், கண்ணன் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமானத் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது பெருத்த சத்தம் கேட்டதையடுத்து சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது  கடுமையான மண்ணெண்ணெய் வாசம் வீசியுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாயில் இருந்து அதிவேகத்தில் எரிவாயு கசிவதைக் கண்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மூவரும் இதுகுறித்து கிராமத் தலைவர் சிவசாமி, மண்டபம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தனபாலன், கிராம மக்கள் மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரிகள் எரிவாயு கசியும் இடத்தை பார்வையிட்டனரே தவிர இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓ.என்.ஜி.சி  நிறுவன அதிகாரிகள் குழாயை அடைக்கும் வேலையை பார்க்காமல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு வாகனங்களை முன்னெச்சரிக்கையாக வரவழைத்தனர். இரவு 7 மணி ஆகியும் எரிவாயு கசிவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் எரிவாயு கசிந்தக் கொண்டே இருந்தது. இதனால் குழாய் வெடித்து அசம்பாவிதம் எதாவது ஏற்பட்டு விடுமோ என்று மக்களும் பெரும் அச்சத்தில் இருந்தனர். 

பின்னர் இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின்படி வேணிக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் இராமநாதபுரம் துணை தாசில்தார் சரவணன், வாலாந்தரவை வி.ஏ.ஓ. மகேஷ்வரன் ஆகியோர் விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர். அப்போதும் எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக இந்த கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் வெடித்து எரியாவு அதிவேகத்தில் கசிகிறது. இதனால் மொத்த கிராம மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்த மாவட்டத்தில் நடத்தும் கூட்டங்களில் கிராம மக்கள் பங்கேற்று குழாய்கள் பழுதடைந்தது குறித்தும், எரிவாயு கசிவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

அதுமட்டுமின்றி, கிராமத்தின் வழியாக செல்லும் குழாய்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்றும் இனி எந்த குழாய்களையும் இங்கு பதிக்கக் கூடாது என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

click me!