இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டுப்போகுது மேட்டூர் அணை!!

By karthikeyan VFirst Published Aug 11, 2018, 10:37 AM IST
Highlights

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் நிலை உருவாகியுள்ளது. 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  பெய்துவரும் கனமழையால் கர்நாடகாவின் கபினி அணை கடந்த 8ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதனால் கபினி அணையிலிருந்து 80,000 கன அடி உபரிநீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கேஆர்எஸ் அணையிலிருந்து 63,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதனால் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்துவருகிறது. 

மேட்டூர் அணையின் நீர்வரத்து 90,000 கன அடியாக உள்ளது. அதனால் அணையிலிருந்து 60,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணை தற்போது 118.5 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால் பிற்பகலில் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்று மீண்டும் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டவுள்ளது. 
 

click me!