ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு; கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பரபரப்பு...

First Published Feb 16, 2018, 9:26 AM IST
Highlights
ONGC oil pipeline Broken Crude oil leaks and mixed in river


திருவாரூர்

தமிழக அரசு சார்பில் பாண்டவை ஆற்றை தூர்வாரும்போது பொக்லின் எந்திரம், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உரசியதில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே எருக்காட்டூர் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் எருக்காட்டூர் கிராமத்தை ஒட்டியுள்ள பாண்டவையாற்றின் குறுக்கே ஆற்றின் மணலுக்குள் குழாய் பதிக்கப்பட்டு அதன் வழியாக வெள்ளக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், நேற்று எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள பாண்டவையாற்றில் அரசு சார்பில் ஆற்றினை தூர்வாரும் பணிக்காக பொக்லின் எந்திரம் ஆற்றுக்குள் வந்தது. அப்போது, ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் எந்திரம் உரசியதில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் பரவியது.

கச்சா எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததைக் கண்ட மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி உதவி ஆட்சியர் செல்வசுரபி, கூத்தாநல்லூர் தாசில்தார் செல்வி, கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் ராஐகோபால் மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் நிகழ்விடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

click me!