
காதலிக்க மறுத்த இன்ஜினியயரிங் மாணவியை தாக்கி கொலை செய்ய முயற்சித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரைச் சேர்ந்தவர் ரம்யா (19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த 5ம் தேதி ரம்யா, மாம்பலம் கே.ஆர். கோவில் தெருவில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், ரம்யாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர், ரம்யாவை நடுரோட்டிலேயே சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர், அவரை காலால், எட்டி உதைத்தார். இதனால், நிலைகுலைந்த ரம்யா சுருண்டு மயக்கமடைந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து ரம்யாவை, தாக்கிய வாலிபரை பிடிக்க முயன்றனர். அதற்குள், அவர் தப்பிவிட்டார். இதையடுத்து படுகாயமடைந்த ரம்யாவை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து குமரன் நகர் போலீசில்,ரம்யாவின் பெற்றோர் புகார் செய்தனர். அதில், எனது மகள் ரம்யாவை தாக்கிய வாலிபர், மேற்கு மாம்பலம் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த யோபுராஜ் (19).
எனது மகள் ரம்யவும், யோபுராஜும் ஒரே பள்ளியில் படித்தனர். அப்போது எனது மகள் நட்பு முறையில் அவருடன், பேசி பழகினார். இதை தவறாக புரிந்து கொண்ட யோபுராஜ், பள்ளி பருவத்தில் இருந்தே எனது மகள் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
அந்த காதல் தற்போது அதிகமாகி எனது மகளிடம் யோபுராஜ் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். காதலை வெளிப்படுத்தியபோது, எனது மகள் ரம்யா, அவரை காதலிக்கவில்லை. ‘‘நான் நட்பாகத்தான் பழகினேன்,காதல் உணர்வோடு உங்களோடு பேசவில்லை, பழகவில்லை’’ என்று என கூறியிருக்கிறார். ஆனால் யோபுராஜ் அதை கேட்கவில்லை.
தினமும் எனது மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இந்த விஷயம் பற்றி எங்களுக்கு தெரியவந்தது.நாங்களும், அவரை சந்தித்து கண்டித்தோம். ஆனால், அதை கேட்காமல், இதுபோல் தொல்லைகொடுத்து,யோபுராஜ் கொடூரமாக தாக்கியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ஒருதலை காதல் பிரச்சனையால், தமிழகத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி உள்பட 5 பெண்கள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.