
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் குகன் (24). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி காயசண்டிகை (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து மனமுடைந்த காயசண்டிகை படுக்கையறைக்கு சென்று கதவை சாத்தி உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். குகன் வீட்டில் மற்றொரு அறையில் தூங்கினார்.
இந்நிலையில் நேற்று காலை படுக்கை அறை கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குகன், கதவை தட்டி மனைவியை அழைத்தார். ஆனால், எந்த பதிலும் இல்லை. அதிர்ச்சியடைந்த அவர், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, காயசண்டிகை தூக்கில் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.
தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். திருமணமாகி2 ஆண்டகள் ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.