
தேனி அருகே உயிரோடு உள்ள விவசாயியை இறந்ததாக காட்டி அவருக்குரிய பணத்தை அதிகாரிகள் சிலர் பெற்றுகொண்டதாக ஒருவர் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே கரட்டுபட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவர் குடும்பத்தின் கஷ்ட நிலை காரணமாக கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், பெருமாள் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு வரவேண்டிய அரசின் நிவாரணத்தை போலி ஆவணங்கள் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகள் பெற்று கொண்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெருமாள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள், தான் இறந்ததாக கூறி அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற செயல்கள் இங்கு அடிக்கடி நடந்து வருவதாகவும், இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.