
தேனி
தேனியில் வியாழக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழையால் 16 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் சாரல் மழை பெய்தது. அதன்படி, அரண்மனைப்புதூரில் 6 மி.மீ., வீரபாண்டியில் 6 மி.மீ, போடியில் 26.6 மி.மீ, கூடலூரில் 8 மி.மீ, பெரியகுளத்தில் 7 மி.மீ, சோத்துப்பாறையில் 8 மி.மீ, உத்தமபாளையத்தில் 27.4 மி.மீ, வைகை அணை நீர்பிடிப்பில் 6 மி.மீ., மழை பெய்தது.
சூறைக் காற்றில் குமணந்தொழு, எரதிமக்காள்பட்டி, ஆசாரிப்பட்டி, மரிக்குண்டு, ராமலிங்காபுரம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் 16 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், இந்தப் பகுதியில் இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் கரும்பு, வாழை முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து பலத்த சேதமாயின. பயிர் சேதம் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக தோட்டக் கலை மற்றும் விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று, அகமலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த நல்ல மழையால் நேற்று அதிகாலை முதல் சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து 70 கனஅடியாக இருந்தது. காலை 8.30 மணிக்கு முழு கொள்ளளவான 100 மில்லியன் கன அடியை எட்டியது.
கோடைகாலத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
நேற்று காலை சோத்துப்பாறை அணையின் நீர் இருப்பு:
நீர் மட்டம் - 126.30 அடி, நீர் வரத்து - 70 கனஅடி, நீர் வெளியேற்றம் - 11 கனஅடி , கொள்ளளவு - 100 மில்லியன் கன அடி.