
தருமபுரி
தருமபுரியில் மான் வேட்டையாடிய மூவருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வன அலுவலர் அதிரடி உத்தரவிட்டார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இராமியம்பட்டி வனப் பகுதியில் மொரப்பூர் வனச் சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மூன்று பேர் வனப் பகுதியில் சுற்றித் திரிந்தனர், அவர்களை பிடித்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் குண்டல்மடுவு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சிவக்குமார், ஜெயவேல் மகன் அசோகன், சீனிவாசன் மகன் காசி என்பது தெரியவந்தது.
இம்மூவரும் கம்பி வலைகளை அமைத்து வனப் பகுதியில் மான் வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பிடிபட்ட மூவரையும் வனத் துறையினர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.
வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவருக்கு தலா ரூ.66,500-ம், ஒருவருக்கு ரூ.67 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.ஒன்றரை இலட்சம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டார்.