தண்ணீர் கேட்டு ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு கிராம மக்கள் ஆட்சியர் அலுவலத்தில் போராட்டம்…

 
Published : Jul 04, 2017, 08:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
தண்ணீர் கேட்டு ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு கிராம மக்கள் ஆட்சியர் அலுவலத்தில் போராட்டம்…

சுருக்கம்

On the day of asking for water four villagers in the collector office

நாமக்கல்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அடுத்தடுத்து திரண்டுவந்து ஆட்சியர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் ஊராட்சி நல்லாகௌண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், “எங்கள் ஊரில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூறி உள்ளோம். மேலும், கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடமும் கூறியிருந்தோம். ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டமங்கலம் ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு செய்தபோது எங்களது ஊர் மக்கள் சார்பில் குடிநீர் இல்லை என கூறினோம். அதற்கு தாங்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினீர்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எங்களது ஊரின் அவல நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

வையப்பமலை அருகே உள்ள மொஞ்சனூர் கிராம மக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “மொஞ்சனூர் கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மழை இல்லாததால் வறண்டு விட்டன.

எனவே, அதை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தாங்கள் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ள லக்கபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “லக்கபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதால், எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

நருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் தெருவை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு நேற்று வெற்றுக் குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “நருவலூர் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மழை இல்லாத காரணத்தால் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. எனவே எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எனவே எங்கள் பகுதிக்கு தனியாக ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரே நாளில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் திரண்டு வந்து மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகமே அதிர்ந்தது.

நான்கு கிராம மக்களும் பலமுறை தண்ணீர் கேட்டு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே ஒரே நாளில் அனைத்து கிராம மக்களும் திரண்டு வந்ததற்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!