
திருவள்ளூர்
மாவட்ட நிர்வாகம், மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து மதுக் கடைகளையும் அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பாமக மாநில செய்தித் தொடர்பாளரும், மாநில சமூக நீதிப் பேரவையின் தலைவருமான வழக்குரைஞர் பாலு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட பாமக வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவை ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளர் ஏ.கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் வ.பாலயோகி, மாவட்டச் செயலாளர் நா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞர் கே.பாலு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
“உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் மத்திய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகளையும் அகற்ற வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளின் விளம்பரப் பலகைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்.
அப்படி அகற்றாவிடில் சமூக நீதிப் பேரவையின் வழக்குரைஞர்கள் களத்தில் இறங்கி அகற்றுவர்.
அதேபோல், இந்த மாவட்டத்தில் எத்தனை மதுக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன, அகற்றப்பட உள்ளன என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
இதுகுறித்த அறிவிப்பை பொது இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து மதுக் கடைகளையும் அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில், வழக்குரைஞர்கள் விஜயன், ரமேஷ், நவமணி, தணிகைமணி, அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.