
சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் இருந்தாலும், நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களும் கால முறைப்படி பெயர்ச்சி ஆனாலும் மூன்று பெயர்ச்சிகளே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவை சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி ஆகியவைதான்!
கோள்களின் சாரத்தை, அதாவது கோள்கள் ஒவ்வொரு ராசியிலும் நின்று மற்ற கோள்களால் பார்க்கப்பட்டு அல்லது சேர்ந்து அதனால் ஏற்படும் பலன்களை கோள்சார ரீதியாக சோதிடர்கள் சொல்வார்கள். சனிப்பெயர்ச்சி, கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஒரு ராசியில் இருக்கும். குரு வருடந்தோறும் பெயர்ச்சி காணும்.
இந்த முறை சனிப்பெயர்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. சனிபகவானின் நட்சத்திர சாரம் என்று பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களைச் சொல்வார்கள். இம்மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.
சனி பகவான், வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சனி பகவானை தர்ம ராஜா என்பார்கள். தர்மத்தின் வழியில் நடப்பவர்கள், நேர்மையாக இருப்பவர்களை சனி பகவான் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. ஆனால், நேர்மை தவறி நடப்பவர்களை, தன் ஆதிக்க காலத்தில், சனீஸ்வரர் படுத்தி எடுப்பார் என்பார்கள்.
இந்த முறை விருச்சிகத்தில் இருந்து தனுசுவுக்கு இடம் பெயரும் சனி பகவானின் தன்மையால், மேஷம், கடகம், துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
அதே நேரம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொண்டு சனிபகவானின் அருளைப் பெறலாம்.
சனீஸ்வரர், சிவபெருமானை உபாசித்து ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். அதனாலேயே ஈஸ்வரரான சிவபெருமான் தன்னைப் போல், தர்மாத்மாவான சனிக்கு ஈஸ்வரப் பட்டத்தை அளித்தார்.
சனீஸ்வரரின் தந்தை சூரிய தேவர். சூரியனுக்கும் சாயா என்ற நிழல் தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சனீஸ்வரர். அதனால் அவர் தன் தாயிடம் மட்டுமே மிகவும் பிரியத்துடன் இருந்தாராம். சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கும் தாய்ப்பாசம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆகவேதான், நிழல் ஆகிய கறுப்பை மிகவும் நேசிக்கிறார் சனிபகவான் என்பர்.
சனிபகவானுக்கு மிகவும் பிடித்தது, எள். கறுப்பு வஸ்திரம் அவருக்கு மிகவும் பிடித்தது. இதனை தானம் கொடுத்தால் அவர் வெற்றியைத் தருவார். தொல்லை தரும் பிரச்சனைகளில் இருந்து தப்பலாம்.
சனிதோஷம் விலக கரு நீலக் கல் பதித்த வெள்ளி மோதிரம் அணியலாம். அந்தக் கல் விரலில் படும் வகையில் அணிந்தால் சிறப்பு. இதனால், சனி தோஷங்கள் விலகும்.
சனி பகவான் ராசியில் கடக்கும் காலத்தை வைத்து, ஏழரை சனி (மூன்று முறை ராசியைக் கடப்பது, முதல், நடு, கடைசி என மூன்று இரண்டரை வருடங்கள்), அர்த்தாஷ்டம சனி (நான்கில்), அஷ்டமச் சனி (எட்டில்) வருவதால் ஏற்படும் தோஷங்களும் விலக சனீஸ்வரருக்குப் பிடித்த எள் தீபம் ஏற்ற வேண்டும். அதாவது எள் சற்று கறுப்புத் துணியில் முடிந்து வைத்து, அதனை விளக்கு ஏற்றும் பீடத்தில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். மேலும், சனிக்கிழமை எள் சாதம் செய்து, சனீஸ்வரருக்கு நிவேதனம் செய்து, அதனை ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும்.
எள் உருண்டை பிடித்து, அதனையும் குழந்தைகள், முதியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
சனீஸ்வரரின் வாகனமான காகத்துக்கு உணவு வைப்பது, வயதானவர்களுக்கு செருப்பு தானம் செய்வது ஆகியவை சனீஸ்வரரின் தொல்லையில் இருந்து நம்மைக் காக்க உதவும்.
நவக்கிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வரருக்கோ, சிவன் கோயிலில் தனியாக உள்ள சனீஸ்வரர் சந்நிதியிலோ வணங்கி, கருநீல மலரால் அர்ச்சித்து, சனிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலான சனி ஹோரையில் சனீஸ்வர காயத்ரியை 108 முறை சொல்லி வழிபடலாம். இதனால் சனி தசை நடக்கும் காலம் முழுதும் நல்ல பலன் கிட்டும்.
சனி பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்