
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இது நாளை முதல் அமலாகிறது என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்துவிட்டனர். இதன் மூலம், தமிழகத்தில் ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7ல் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அபாயப் பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கான கொரோனா பரிசோதனை விகிதம் 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, அபாயப் பட்டியலில் அல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் இதுவரை தோராயமாக இரண்டு பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது என்றால், அது தற்போது 10 பேராக உயர்த்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைத்து நாடுகளிலிருந்து வருவோருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் நாளை முதல் 7 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுகிறது. அபாயப் பட்டியலில் உள்ள நாடுகளை மட்டுமல்லாமல், அபாயப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் இந்த கட்டுப்பாடு நாளை முதல் பொருந்தும். ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, நட்சத்திர விடுகளில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். கூட்டமாக நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களும், அதில் பங்கேற்பதும் வேண்டாம். தமிழகத்தில் தற்போது 1,400 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.