Omicron impact : தமிழகத்திலும் ஒமைக்ரான்.. பள்ளிகள் தொடர்ந்து நடக்குமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!

By Asianet TamilFirst Published Dec 16, 2021, 9:54 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது துறை ரீதியான நடவடிக்கைகள்தான். எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

வருகிற 25 ஆம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
 
ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்ததால், ஜனவரி 3-ஆம் தேதி முதல் பள்ளிகளில் சுழற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்படாததால், பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் பலரும் தயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடைய சுழற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் பற்றியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறார். “தற்போதுவரை ஒமைக்ரான் வைரஸின் வீரியம் குறைவாக உள்ளது. எனவே, ஜனவரி 3ஆம் தேதி முதல் 6-ஆம் வகுப்பு தொடங்கி 12-ஆம் வகுப்பு வரை சுழற்சி முறை வகுப்பு இல்லாமல் தினசரி வகுப்புகள் நடைபெறும் என ஊரடங்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில்  ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறையிடம் கேட்டுள்ளோம். வருகிற 25 ஆம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் அறிவிக்கப்படும்” என்று அன்பிக் மகேஷ் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து சட்டரீதியாக போராடுகிறோம். ஏற்கனவே டெல்லி சென்று பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். பின்னர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. 14417 என்ற புகார் என்னையும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் அறியும்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது துறை ரீதியான நடவடிக்கைகள்தான். எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. இதில் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கூடுதலாக சென்னை மேயர் பொறுப்பு வழங்கினால்ம் சிறப்பாக செயல்படுவார். அமைச்சர் பதவி வழங்கினாலும் சிறப்பாக செயல்படுவார்.” என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

click me!