
கிருஷ்ணகிரி,
நிலப்பிரச்சினையில் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
கிருஷ்ணகிரி அருகே அக்ரகாரம் பக்கமுள்ள கார்வேபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் ஒரு விவசாயி.
இவருக்கு சொந்தமாக 21 சென்ட் நிலம் சுண்டேகுப்பம் கிராமத்தில் இருக்கிறது. அந்த நிலத்தை ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலி பத்திரம் தயாரித்து அபகரித்து கொண்டுள்ளார். அதை மீட்டு தரும்படி அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்துள்ளார் முருகன். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன், தனது மாற்றுத்திறனாளி தங்கை பூங்கொடியுடன் திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
அங்கு ஆட்சியரின் கார் நிற்கும் இடத்திற்கு அருகில் உள்ள புல்வெளியில் அமர்ந்து விசம் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மக்கம் போட்டு கீழே சாய்ந்தார்.
இதை அங்கிருந்த காவலாளர்கள் கவனித்து முருகன் அருகில் சென்றனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் அந்த பகுதியில் இருந்த அரசு ஜீப்பில் அவரை ஏற்றி, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.