
மதச்சுதந்திரத்திற்கு வாழ வகை செய்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மத்திய அரசின் மதத்துவப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் – கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளி வாசலில், கரூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைப்பெற்றது.
இதற்கு தலைமை தாங்கியவர் கரூர் மாவட்ட காஜி அப்துர்ரகீம். தோகைமலை அரபிக்கல்லூரி முதல்வர் சுல்தான் சைய்யது இப்ராகிம் வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மதச்சுதந்திரத்துடன் வாழ வகை செய்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மத்திய அரசின் மதத்துவபோக்கை கண்டித்தல். மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய 44–வது பிரிவை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்கம் செய்தல்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ள மாவட்டம் முழுவதும் ஷரீஅத் சமரச மையங்கள் தொடங்குவது. இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மாற்று சமய சகோதர, சகோதரிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாவட்டம் முழுவதும் பெண்ணுரிமை காத்த இஸ்லாம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது.
பள்ளப்பட்டியில் நடந்து வரும் திருமண கவுன்சிலிங் வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்து, அதில் தலாக் முறை சம்பந்தமான விளக்கங்களை தெளிவு படுத்துதல். ஒவ்வொரு முஸ்லிம்களும் ஷரீஅத் சட்டங்களின் மகத்துவத்தை உணர்ந்து அதை நடைமுறைப்படுத்தி பாதுகாப்புடன் அந்த சட்டத்தின் சிறப்பை மாற்று சமய சகோதரர்களுக்கு எடுத்துரைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முகமது அபுல் ஹசன் ஷாதலி நன்றி கூறினார்.