விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பரிதாபம்...! - நகைப்பட்டறையில் அதிகாரிகள் ஆய்வு...!

First Published Dec 23, 2017, 11:49 AM IST
Highlights
Officials are investigating the killing of 3 people who have been hit by a gas leak.


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நகைப்பட்டறையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செந்தில்வேல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றார். 

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பாதர் ராண்டி வீதியில் ஒரு வணிக வளாகத்தில் தங்க நகை பட்டறை உள்ளது. இந்த நகைப்பட்டறையை ரவிசங்கர் என்பவர் நடத்தி வருகிறார். 

நகைகளை சுத்தம் செய்யும்போது வெளியாகும் ஆசிட் கழிவு நீர், கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் உள்ள தொட்டியில் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏழுமலை, கவுரிசங்கர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தனர். 

முதலில், கழிவு நீர் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுக்கப்பட்டது. பின்னர் அடியில் உள்ள சேறை அகற்ற ஏழுமலை, கவுரிசங்கர் ஆகியோர் உள்ளே இறங்கினர். ராதாகிருஷ்ணன், தொட்டியின்மேல் நின்று கழிவுகளை வாங்கி கொட்ட நின்றிருந்தார். 

தொட்டியில் இறங்கியவர்கள் மூச்சு முட்டுவதாக கூறி கூச்சலிட்டனர். சில நொடியில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.  பயந்துபோன ராதாகிருஷ்ணன் உதவிக்கு ஆட்களை அழைத்தார். அப்போது நகை பட்டறையில் மேற்பார்வையாளராக பணியாற்றிய சூர்யகுமார்  தொட்டிக்குள் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயன்றார். 

அப்போது அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். உடனே, கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அவர்கள் மூவரும் இறந்துவிட்டனர். 

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தங்க பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் மீது உயிர் பாதுகாக்கும் கவசம் இல்லாமல் அபாயகரமான வேலையை செய்ய அனுமதித்ததற்காக 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நகைப்பட்டறையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செந்தில்வேல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றார். 
 

click me!