
கோவையில் கூரியர் நிறுவன அதிகாரியை கட்டிப்போட்டு ரூ.9½ இலட்சத்தை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் ‘இ.காம் எக்ஸ்பிரஸ்‘ என்ற தனியார் கூரியர் நிறுவனம் இருக்கிறது. ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பொருட்கள், வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் மூலம் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
கோவை கரும்புக்கடையை சேர்ந்த நிஷார் (35) என்பவர் இந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். மேலும் 16 ஊழியர்களும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த சில நாள்களாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், இந்த நிறுவனத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.8 இலட்சம் அலுவலக லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது. புதன்கிழமை இரவு 11 மணியளவில் ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மேற்பார்வையாளர் நிஷார் மட்டும் அன்றைய தினம் வசூலான பணத்தை எண்ணிக்கொண்டு இருந்தார்.
அப்போது முகமூடி அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். திடுக்கிட்டு போன நிஷாரை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப் போட்டனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1½ இலட்சத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து லாக்கர் இருக்கும் அறையை காண்பிக்குமாறு நிஷாரிடம் மிரட்டி சாவியை வாங்கினார்கள். லாக்கர் இருந்த பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் சாவி மூலம் திறந்து அதில் இருந்த ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்தனர். மொத்தம் ரூ.9½ இலட்சத்தையும் ஒரு பையில் அள்ளிப்போட்டனர்.
பின்னர் அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய டிஸ்க்கை, கேமரா கட்டுப்பாட்டு கருவியை திறந்து எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். கொள்ளையர்கள் சென்றதும், கைக் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்த நிஷார் நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து ராமநாதபுரம் காவல்துறையினருக்கு அவர் புகார் செய்தார்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், காவல் துணை கமிஷனர் இலட்சுமி மற்றும் உதவி கமிஷனர் கோபி, இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இலட்சக்கணக்கில் பணம் இருப்பதை அறிந்து கொண்டு இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது. எனவே தனியார் நிறுவன ஊழியர்கள் யாராவது தகவல் கொடுத்து இந்த கொள்ளை நடைபெற்று இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
வசூலான பணம் மற்றும் இருப்பு குறித்து இ–மெயில் மூலம் நிஷார் கூரியர் நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். சில நிமிடங்களில், பணம் கொள்ளையடிக்கப் பட்டதாக மீண்டும் இ–மெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். எனவே நிஷாரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் அதிகாரிகள் கூறும்போது, இந்த கொள்ளையில் விரைவில் துப்புதுலங்கிவிடும். அந்த நிறுவனத்தில் உள்ளவர்களில் யாரோ தகவல் கொடுத்துத்தான் இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாக்கரில் பதிவாகியுள்ள கைரேகைகளை ஒப்பிட்டு பார்க்கும் பணி நடந்து வருகிறது. அருகில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.
கோவை சிங்காநல்லூரில் கடந்த வாரம், பஞ்சு வியாபாரி பஷீர் என்பவருடைய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 150 பவுன் தங்கநகை மற்றும் ரூ.40 இலட்சத்தை 12 பேர் கொள்ளையடித்துச் சென்றனர். இதில் தொடர்புடையவர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய டிஸ்க்கை உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளையிலும் அதுபோன்று நடைபெற்றுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் தற்போது இந்த நூதன முறையை கையாண்டு வருகிறார்கள். இதனால் காவல்துறையினருக்கு கொள்ளையர்கள் தொடர்பான அடையாளம் கிடைக்காமல் துப்புதுலக்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.