அதிமுக பொதுக்குழு முடிவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது மற்றும் பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த் உச்ச நீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் எனவும், தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. அதன்படி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, ஓபன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்தியா - கனடா பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்: முகமது எல்பரடேய் பிரத்யேக பேட்டி!
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.