சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. அந்தவகையில், சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
FedEx கூரியர் அழைப்புகள் என்ற பெயரில் ஆன்லைன் மோசடி நடைபெறுவதாகவும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் FedEx கூரியர் சேவை நிறுவன ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் FedEx கூரியரில் இருந்து பேசுகிறோம் என அழைத்து, பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை பெறுகின்றனர். அத்துடன், வேறு சில கணக்குகளுக்கு பணத்தை மாற்றுவதாலும் இந்த மோசடி நடைபெறுகிறது. வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, வேறு சில கணக்குகளுக்கு பணத்தை மாற்றுவதால் மோசடி நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய விவரம் பின்வருமாரு;
** கொக்கைன் அல்லது அதிக மதிப்புள்ள நகைகள் போன்ற சட்டவிரோத பொருட்கள் அடங்கிய பார்சல் ஒன்று தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலக்கு வைக்கப்படும் நபருக்கு செல்போனில் அழைத்து கூறுகின்றனர்.
** பின்னர், அந்த நபரை போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் தொடர்பு கொள்கிறார். மேலும் கூடுதல் விசாரணைக்காக அந்த நபர் ஸ்கைப் மூலம் ஆஜராக வேண்டும் என கூறுகின்றனர்.
** இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அந்த நபரிடம் கூறுகின்றனர்.
** இதையடுத்து, சிபிஐ, ரிசர்வ் வங்கி ஆவணங்கள், குறிப்பிட்ட நபரின் பெயரில் கைது வாரண்ட் என பலவற்றை அனுப்புகிறார்கள்
** மேலும், அந்த நபரின் ஆதார் எண் பணமோசடிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் மோசடி செய்பவர்கள் கூறுகின்றனர்.
அக்.3இல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை!
** அதன்பிறகு, அந்த நபரின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டையின் விவரங்களைச் சேகரித்து, ரிசர்வ் வங்கியின் சரிபார்ப்புக்குப் பிறகு பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்து, மோசடியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றச் சொல்கிறார்கள்.
இது உண்மையானது என்று நம்பி, மக்கள் தங்கள் வங்கி ஆவணங்களை மோசடி செய்பவர்களிடம் கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட கணக்குகளுக்கு பணத்தை மாற்றுகின்றனர். இதன்மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
இந்த மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஏதேனும் புகார்கள் இருந்தால், சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930ஐத் தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in இல் தங்கள் புகாரைப் பதிவு செய்யவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.