
சேலம்
தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 144 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர் தங்கவேலன் தலைமை தாங்கினார்.
“சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்,
வெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் சட்டென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட 107 பெண்கள் உள்பட 144 பேரை கைது செய்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலை அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சாலை மறியலினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்க தலைவர் தங்கவேலன் செய்தியாளர்களிடம் கூறியது:
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்தி தொடருவோம்” என்று கூறினார்.